search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரிச்சல்முனை கடற்கரை"

    • ராமேஸ்வரம் வருகை தந்த பிரதமர் மோடி, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியதோடு 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினார்.
    • கடற்கரையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சியை சில நிமிடங்கள் மேற்கொண்டார்.

    ராமேசுவரம்:

    அயோத்தி ராமர் கோவில் சிறப்பு விழாவை யொட்டி தென்னகத்தில் உள்ள ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கிய வழிபாட்டு தலங்களுக்கு பிரதமர் மோடி ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு உள்ளார். அதன் ஒரு பகுதியாக தமிழகம் வந்த அவர் நேற்று காலை ஸ்ரீரங்கத்தில் ராமரின் குலதெய்வமான ரெங்கநாத பெருமாளை வழிபட்டார்.

    பிற்பகலில் ராமேஸ்வரம் வருகை தந்த பிரதமர் மோடி, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியதோடு 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினார். இதையடுத்து இன்று காலை தான் தங்கி இருந்த ராமகிருஷ்ண மடத்தி லிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரிச்சல் முனை கடற்கரைக்கு சென்றார்.

    ராமாயணத்தில் ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதையை மீட்க அரிச்சல் முனை பகுதியில் இருந்து ராமர் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்ற இடத்தில் பிரதமர் மோடி வழிபட்டார். அதேபோல் ராமர் மணலால் சிவலிங்கத்தை உருவாக்கி சிறப்பு பூஜை செய்தார் என்று ராமாயண இதிகாசத்தில் கூறப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி இன்று அரிச்சல்முனை கடற்கரையில் மணலால் சிவலிங்கம் உருவாக்கப்பட்ட இடத்தில் வண்ண மலர்களை தூவி சிறப்பு வழிபாடு செய்தார்.

    பின்னர் கடற்கரை பகுதியில் காலார நடந்த அவர் அதிநவீன கேமிரா மூலம் கடலின் இயற்கை அழகை பார்த்து ரசித்தார். தொடர்ந்து கடல் நீரை கையில் எடுத்து சூரியனை நோக்கி தெளித்து சூரிய வழிபாடு செய்தார். மேலும் கடற்கரையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சியை சில நிமிடங்கள் மேற்கொண்டார்.

    இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தூணிற்கு பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடி, ராமாயணத்தில் ராவணனின் தம்பி விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்த கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.

    ×